Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

07 February 2011

தேநீர்க்கோப்பை ....!!!




வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் இல்லை
ஒரு - தேநீர் கோப்பையின் சுவை...!!!

ஊசியாய்க்குத்தும்
குளிர்காற்றின் நடுவில்...
உன் - கரம் கோர்த்தபடி....
நடந்து....;
சாலையோரத்துக் கடைமுற்றத்தில்
பருகும்
தேநீரில் இருக்கிறது !!!

ஒவ்வொரு விடியற்காலையிலும்...
ஒரு கோப்பை தேநீரோடு.
உன்னை சந்திப்பதில்
இருக்கிறது.... !!!

நீ அறியாமல்
ரகசியமாய்....
ஒரு மிடர் பருகி...
மீதியை உனக்களிப்பதில்
இருக்கிறது.....!!!

நீ குடித்த
மிச்சத் தேநீரின்...
மீதித்துளியை;
பருகிவிட்டுப்போவதிலும்
இருக்கிறது.....!!!

ஒவ்வொருநாள் மாலையிலும்...
உனக்காக காத்திருப்பதிலும்....
சுவாரசியமாய் பேசிக்கொண்டே
பருகுவதிலும் இருக்கிறது...
தேநீரின் சுவை...!!!!

இப்போதெல்லாம்
நீயில்லா தனிமைகளில்...
ஆறிக்கிடந்து.........;
அநாவசியமாய்
இறங்கிச்செல்கிறது....
ஒரு தேநீர் கோப்பை...!!!

உனது அருகாமையைபோல்....
.......................
வெறும்....சுடுநீரால்...
தேயிலைச்சாறினால்..
இல்லை...
சீனியினாலோ
சுவையாகி .விடுவதில்லை...
ஒரு தேநீர் கோப்பை........!!!

16 November 2010

திருட்டுப்போன நாட்கள்



















கணக்க சிநேகிதிகளின்
சங்கதிகள்
இப்படித்தான் இருக்கிறது.....

உன் திருமண நாளில்
உன்னோடு இருக்கமுடியாமல் போன
துயரங்களின் வலி....
யாரிடமும் பகிரப்படாமல்
பத்திரமாய் இருக்கிறது.....

ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை.......

நேரம் இருந்தாலும்...
அழைத்து வர
வாப்பவுக்கோ ;
சகோதரர்களுக்கோ;
நேரம் வாய்க்காமலேயே....
நாட்கள் தொலைகிறது...!!!

எப்படியிருக்கிறாய்!!
என்றறிய....
எப்போதும்
பதறிக்கிடக்கிறது மனசு !!!

வகுப்பறையில்
என் பக்கத்து இருக்கையில்
எப்போதும்
நீயே அமர்ந்திருப்பாய்....

என் பிறந்த நாள்
பரிசாய்
நீ கொடுத்த 'பேப்பர் வெயிட்'டின்
அடியில்
இப்போதும் சிக்கியபடி இருக்கிறது
உன் நினைவுகள்!!!!

இப்போது எப்படியிருக்கிறாய்?

காற்றடிதாலே உடையும்
ஊசிக்குழல் போலவேதான்
இப்போதும் இருக்கிறாயா?

அடையாளம் இல்லாமல்
கொளுத்திருக்கிறாயா?

ஒன்றாய் திரிந்த
நமது வகுப்பறைகள்....
சண்டை போட்டு
உன் புத்தகத்தில் போட்ட
கிறுக்கல்கள்...

நான்
பேசவில்லை என்பதற்காய்
வடித்த கண்ணீர் துளிகள்
நினைவிருக்கா??

இப்போது எங்கிருக்கிறாய்?

உன் குழந்தைகளின்
கலவரத்தில்....
நான் நினைவிலிருப்பது
நிச்சயமில்லை...

நாமிருவர் அமர்ந்தபடி
மரத்தடியில் எடுத்த புகைப்படம்
இப்போது
எப்படியிருக்கிறது......

இப்படித்தான்
ஒரு புகைப்படத்தில்....
ஒரு ஆட்டோக்ராபில்
முடிந்து விடுகிறது
நம் சிநேகிதம்....

ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை.......

என்றாலும் - நீ
மிக மிக பத்திரமாய்
என் மனசிலிருக்கிறாய் !!!

- ரஹீமா பைஷல்

11 September 2010

வாப்பாவுடனான பெருநாள்....!!!
















ஒரு கடமையைபோல
சாதாரனமாய்
கழிந்து விடுகிறது
நமது பெருநாள்கள்.....

மருதாணி வாசம்...
தெருவேகிலும்.............
பட்டாசுச்சத்தம்!

செவிகளில் மணக்கும்
தக்பீர் வாசம்...
எதிலும் ஒட்டாமல் என் மனசு...

தொழப்போகமுன்னரே.....
மஞ்சள் சோறும்
கோழிக்கறியுமாய்
ஒன்றாய் அமர்ந்து....
சாபிட்டதெல்லாம்
ஒருகாலம்.....

பெருநாள் காசுக்காய்
உங்களிடம் காத்துக்கிடந்ததில்...
சேர்ந்த காசுகளை
முழுத்தாளாய்...
உங்களிடமே;
மாற்றி எடுப்பதிலும்...
ஒரு சந்தோசம் இருந்தது வாப்பா !!!

இப்போதெல்லாம்;
நானே சம்பாதித்த காசு
கையிலிருக்கிறது.....
பழைய சந்தோசங்களில்லை....

வெறும் புத்தாடைகளோ;
மருதாணி வாசமோ...
விதவிதமான
பலகாரங்களாலோ;
காகித நோட்டுக்களாலோ..;
அழகாக்கி விடமுடியாது...
வாப்பாவின் இருப்பைபோல;
ஒரு பெருநாளை....


ஒவ்வொரு
பெருநாள் தொழுகையின்
பின்னாலும்...
ரகசியமாய் அழும்...
உம்மாவின் கண்நீருக்குப்பின்னால்
ஆயிரம் துயரங்களிருக்கும் ....

எப்படியோ.......
-------------------------
----------------------
வாப்பா!
கலைக்கப் படாத
புத்தாடைகளைபோல....
பத்திரமாய் இருக்கிறது....
பெருநாட்களிலான;
உங்களின் நினைவுகள்



றஹீமா பைஷல்

04 September 2010

என்னால முடியலம்மா...........


நிறுத்தும்மா....!!!
இனியும் முடியாது.....
இதற்குமேல் சுமக்க...

படிக்கச்சொல்லி
அடிக்கிறாய்....
கருவறையிலேயே
என் - வகுப்பறைபற்றி
கனவில் மிதக்கிறாய்.....

ஒரு கார்ட்டூன் பார்க்க
விடுவதில்லை....
பக்கத்துப் பெண்குழந்தைகளோடு...
சிரித்துப்பேச விடுவதில்லை...
ஊர் சுற்ற விடுவதில்லை...

புத்தகத்தோடு வருகிறாய்...
''எ போர் ஆப்பிள்..''
''பி போர் போல்...''
என எபோதும்
மிரட்டுகிறாய்.....

காலையிலும்
வகுப்பு...
மாலையிலும் வகுப்பு...
நீ என்ன பாரதியின் எதிரியா ???

விடியற் காலையிலேயே
அரட்டுகிறாய்.....
வெடவெடக்கும் குளிர்நீரில்
குளிப்பாட்டுகிறாய்....

பூச்சாண்டியின் பேர் சொல்லி
உணவூட்டி....
முதுகில் புத்தக மூட்டையை
மாட்டி....
நெருக்கி அடிக்கும்
ஆட்டோவில் என்னை
சொருகி விடுகிறாய்...
எல்லோரும்
என்னை நெருக்கிறாங்களே...
''ஐயோ முதுகு வலிக்குதே....''

கதறக்கதற
துரத்துகிறாய்...
போ .......

அவன பாரு
இவள பாரு...
எப்படி எழுதுறான்னு....
என்ன வடிவா ரைம் சொல்றான்னு...
இப்படியே சொல்லி
என்னை கொல்றியே...

எம்மா !!!
என்னால முடியலம்மா...........
'ஹோம் வொர்க்' பண்ண
நான் தூங்கறேன்....!!!!!

21 August 2010





அல்குர்ஆன்

கருவாப்பட்டையும்;
கராம்பும்...;
மிளகாய்த்தூள் இட்ட
புளியம்பழமும்தான்;

குர்ஆன்
மதரஸாவுக்கு...
நம்மை உற்சாகப்படுத்தும்!!

முதலில் மட்டை கழரும் ....
அடுத்தடுத்து
பக்கங்கள் கிழியும்....
அழுக்குச்சட்டையும்;
அலுப்புமாய் தொடரும்
பயணம்
சட்டென ஒருநாள்
முடிவுக்குவரும்
வீட்டு மூலைக்கு
குர்ஆன்கள்
இடம்மாறும்

மாசாலா உலகத்தில்
வெற்றுப்புத்தகங்களோடு மட்டும்
முட்டிக்கொண்டோம்...

ரமழான் மாசத்தின் போதும்.....
யாராகிலும்
உறவுக்காரர்கள்
மவுத்தாகிப்போகிறபோதும்
மட்டுமே
தூசு தட்டப்படுகிறது.........
நமது
குர்ஆன்கள் !!!!

ஏராளம் அதிசயங்களோடு ....
எல்லாப் பிரச்சினைக்குமான
அழகிய தீர்வோடு
கையிலிருக்கிறது
குர்ஆன்கள் !!!

நாம்தான்
ஓடிக்கொண்டிருக்கிறோம்.....
வாழ்க்கை வெறுத்த
வருத்தங்களோடு......

ஒரு சொட்டு
நேரம் ஒதுக்கு............
குர்ஆன் ஓது..!!!
அதன் பரவசத்தில்
மூழ்கு...............
அது சொல்லும் சேதிகளை
ஆழ்ந்து துலாவு....
இம்மை மறுமை
இரண்டும்..
அழகாகும்....

எழுத்துக்கு பத்தாய்
நன்மை தரும்
குர்ஆன்களை மறந்து...
.....
ஒன்றுக்கு ஒன்று!!!
இலவசமாம்....;
------------------------------
என்னும்
கடைகளில் ஏறி
முண்டியடிக்கிறது
சனங்கள்...........!!!!
இந்த ரமழான் மாதம்
முழுக்கவும்....!!!



17 August 2010




பரீட்சை....

காலம் காலமாய்....
உசிரைத்தின்னும்
பரீட்சைகள்...

விளையாட்டுக்களெல்லாம்
ஓரங்கட்டப்படும்...
சட்டென பக்தி முற்றும்

பாடப்புத்தகங்கள்
வரிசையாய்;
மேசையில் அடுக்கி
அடிக்கடி
அளந்துபார்க்கப்படும்

டிவி பார்க்ககூடாது....
நேரத்துக்கு
எழும்பணும்...
பத்து மணிக்குமுன்னால்
தூங்கிவழியக்கூடாது...

பார்த்துப்பார்த்து
பத்திரமாய்
பரீட்சைக்கு தயாராகிவிடுகிறார்கள்
வீட்டிலிருக்கும்
எல்லோரும்;
..................................
எழுதப்போகும் என்னைத்தவிர...!!!!

பயமும் ...பயங்கரமுமாய்
தொடர்ந்து கொண்டே வருகிறது
பரீட்சைப்பூதம்......

பதின்மூன்று வருஷ
பள்ளிக்கூட வாழ்க்கை....;
பரீட்சை பேப்பர் களுக்கென்றே
தொலைந்து போயிற்று...!!

வயிறுவலிக்கும் ;
தலைசுற்றும்;
உடல் வியர்த்து ஊத்தும்;
இப்படித்தான்
ஒவ்வொரு பரீட்சைக்குமுன்னாலும்
உடலின் வானிலை அறிக்கை
மாறிவிடுகிறது...

பெருத்த மழை
பூகம்பம்...
மந்திரியின் மரணம்-என
ஏதாவது நடந்து
பரீட்சை தள்ளிப்போக வேணும் என்று
சுயநலமாய் சிந்திக்கும் பாழாய்ப்போன மனசு....

கடைசியில்..
எழுதிய பேப்பர்
தொலைந்து போகும்படியும்....
வைத்த நேர்த்திக்கடன்கள்
தோற்றுப்போகும்.....

பார்ப்பம் ;
அடுத்த பரீட்சைகேனும்
இதைவிட சிறப்பாய்
படித்தே தீருவேன்..! - என
ஒவ்வொரு பரீட்சைக்குப் பின்னாலும்
திட்டமிடுவதே வாடிக்கையாயிற்று ....

20 June 2010

டயரி....!






திட்டித்தீர்த்தபோதும்..
இவை
பேனா மையினைத்தான்
தீர்த்தமாய் அருந்தும்!!

சொல்ல முடியாத
ரகசியங்கள்
ரகசியங்களாகவே
இதில் இருந்துவிடுகின்றன

வசனங்களாய்
கொட்டு.................
சுமக்க முடியாமல் போன
வாழ்வின் துயரங்களை எல்லாம்!!!!

நேரங் கிடைக்கும்
பொழுதுகளிலெல்லாம்
நிறைய நிறைய பேசு
மனிதர்களைபோல
ரகசியங்களை சொல்லும்
அசிங்கங்களை
டைரிகள் செய்யவதும் இல்லை

உயிரில் உறையாத
உணர்வுகளை
உலரப்போடு.....!!!

மறக்கமுடியாத
சமாச்சாரங்களை;
மனசின் சந்தோசங்களை
சேமித்து வை;
வாழ்வின் கடைசிப்பக்கங்களுக்காய்....!!!

எதுவும் எழுதப்படாமல்
பெயரை மட்டுமே
சுமந்தபடி
சும்மாவே இருக்கும்
நிறைய்யப்பேரின்
டயரிகள்..!!!

டயரிகள்
சொல்லும் சேதிகள்
சுவாரசியம்தான்........

கவனம் ....!!!!!!!!!!!
அடுத்தவன் டயரி புரட்டி
அசிங்கப்படாதிருக்கட்டும்
நம்
விழிகள்!!!!!!!!!!!!!!

04 June 2010

கடற்கரை.....


........

கால்கள்தான்
நடந்தன.................
மனசு குளிர்ந்தது!!!
கடற்கரையில்;


சிப்பிகள் சேகரிக்கும்
ஒரு குழந்தைத்தனமான
வயசிலும்.........
முதுமையிலுமாய்
வயசுகளுக்கு அப்பாற்பட்ட
அழகு
கடலில் மட்டுமே
இருக்கமுடியும்!!!


ஒரு அமைதியான
வாசிகசாலையின் ....
ஒரு மூலையில்
தனித்திருப்பதைப்போல
இந்தமணலில்.........
அமர்ந்திருத்தல்
கொள்ளைஅழகு!!!!


நட்சத்திரம் தெளித்து....
நிலா நிறைந்த
இரவுகளில்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்கின்றன

குட்டிக் குட்டிக் கவிதைகள்
சொல்லிவிட்டு
திரும்பி ஓடும்
அலைகள்.....

கச்சான் விற்கும்
சிறுவன்!!

கால் புதையும்
மணல்!!!

என-ரசிப்பதற்கு
ஏராளமுண்டு..


ஆனாலும்
................
..................
மனிதர்களைப்போலவே;
வாசிக்க
விரும்பாத
இன்னுமொரு பக்கம்
கடலுக்கும் உண்டு
'சுனாமி' என்னும்
பயங்கரப்பெயரோடு