16 November 2010

திருட்டுப்போன நாட்கள்



















கணக்க சிநேகிதிகளின்
சங்கதிகள்
இப்படித்தான் இருக்கிறது.....

உன் திருமண நாளில்
உன்னோடு இருக்கமுடியாமல் போன
துயரங்களின் வலி....
யாரிடமும் பகிரப்படாமல்
பத்திரமாய் இருக்கிறது.....

ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை.......

நேரம் இருந்தாலும்...
அழைத்து வர
வாப்பவுக்கோ ;
சகோதரர்களுக்கோ;
நேரம் வாய்க்காமலேயே....
நாட்கள் தொலைகிறது...!!!

எப்படியிருக்கிறாய்!!
என்றறிய....
எப்போதும்
பதறிக்கிடக்கிறது மனசு !!!

வகுப்பறையில்
என் பக்கத்து இருக்கையில்
எப்போதும்
நீயே அமர்ந்திருப்பாய்....

என் பிறந்த நாள்
பரிசாய்
நீ கொடுத்த 'பேப்பர் வெயிட்'டின்
அடியில்
இப்போதும் சிக்கியபடி இருக்கிறது
உன் நினைவுகள்!!!!

இப்போது எப்படியிருக்கிறாய்?

காற்றடிதாலே உடையும்
ஊசிக்குழல் போலவேதான்
இப்போதும் இருக்கிறாயா?

அடையாளம் இல்லாமல்
கொளுத்திருக்கிறாயா?

ஒன்றாய் திரிந்த
நமது வகுப்பறைகள்....
சண்டை போட்டு
உன் புத்தகத்தில் போட்ட
கிறுக்கல்கள்...

நான்
பேசவில்லை என்பதற்காய்
வடித்த கண்ணீர் துளிகள்
நினைவிருக்கா??

இப்போது எங்கிருக்கிறாய்?

உன் குழந்தைகளின்
கலவரத்தில்....
நான் நினைவிலிருப்பது
நிச்சயமில்லை...

நாமிருவர் அமர்ந்தபடி
மரத்தடியில் எடுத்த புகைப்படம்
இப்போது
எப்படியிருக்கிறது......

இப்படித்தான்
ஒரு புகைப்படத்தில்....
ஒரு ஆட்டோக்ராபில்
முடிந்து விடுகிறது
நம் சிநேகிதம்....

ஆண்களை போல
நம்மால்;
காலம் காலமாய்
உறவுகளை
தொடரமுடிவதில்லை.......

என்றாலும் - நீ
மிக மிக பத்திரமாய்
என் மனசிலிருக்கிறாய் !!!

- ரஹீமா பைஷல்