21 August 2010





அல்குர்ஆன்

கருவாப்பட்டையும்;
கராம்பும்...;
மிளகாய்த்தூள் இட்ட
புளியம்பழமும்தான்;

குர்ஆன்
மதரஸாவுக்கு...
நம்மை உற்சாகப்படுத்தும்!!

முதலில் மட்டை கழரும் ....
அடுத்தடுத்து
பக்கங்கள் கிழியும்....
அழுக்குச்சட்டையும்;
அலுப்புமாய் தொடரும்
பயணம்
சட்டென ஒருநாள்
முடிவுக்குவரும்
வீட்டு மூலைக்கு
குர்ஆன்கள்
இடம்மாறும்

மாசாலா உலகத்தில்
வெற்றுப்புத்தகங்களோடு மட்டும்
முட்டிக்கொண்டோம்...

ரமழான் மாசத்தின் போதும்.....
யாராகிலும்
உறவுக்காரர்கள்
மவுத்தாகிப்போகிறபோதும்
மட்டுமே
தூசு தட்டப்படுகிறது.........
நமது
குர்ஆன்கள் !!!!

ஏராளம் அதிசயங்களோடு ....
எல்லாப் பிரச்சினைக்குமான
அழகிய தீர்வோடு
கையிலிருக்கிறது
குர்ஆன்கள் !!!

நாம்தான்
ஓடிக்கொண்டிருக்கிறோம்.....
வாழ்க்கை வெறுத்த
வருத்தங்களோடு......

ஒரு சொட்டு
நேரம் ஒதுக்கு............
குர்ஆன் ஓது..!!!
அதன் பரவசத்தில்
மூழ்கு...............
அது சொல்லும் சேதிகளை
ஆழ்ந்து துலாவு....
இம்மை மறுமை
இரண்டும்..
அழகாகும்....

எழுத்துக்கு பத்தாய்
நன்மை தரும்
குர்ஆன்களை மறந்து...
.....
ஒன்றுக்கு ஒன்று!!!
இலவசமாம்....;
------------------------------
என்னும்
கடைகளில் ஏறி
முண்டியடிக்கிறது
சனங்கள்...........!!!!
இந்த ரமழான் மாதம்
முழுக்கவும்....!!!



17 August 2010




பரீட்சை....

காலம் காலமாய்....
உசிரைத்தின்னும்
பரீட்சைகள்...

விளையாட்டுக்களெல்லாம்
ஓரங்கட்டப்படும்...
சட்டென பக்தி முற்றும்

பாடப்புத்தகங்கள்
வரிசையாய்;
மேசையில் அடுக்கி
அடிக்கடி
அளந்துபார்க்கப்படும்

டிவி பார்க்ககூடாது....
நேரத்துக்கு
எழும்பணும்...
பத்து மணிக்குமுன்னால்
தூங்கிவழியக்கூடாது...

பார்த்துப்பார்த்து
பத்திரமாய்
பரீட்சைக்கு தயாராகிவிடுகிறார்கள்
வீட்டிலிருக்கும்
எல்லோரும்;
..................................
எழுதப்போகும் என்னைத்தவிர...!!!!

பயமும் ...பயங்கரமுமாய்
தொடர்ந்து கொண்டே வருகிறது
பரீட்சைப்பூதம்......

பதின்மூன்று வருஷ
பள்ளிக்கூட வாழ்க்கை....;
பரீட்சை பேப்பர் களுக்கென்றே
தொலைந்து போயிற்று...!!

வயிறுவலிக்கும் ;
தலைசுற்றும்;
உடல் வியர்த்து ஊத்தும்;
இப்படித்தான்
ஒவ்வொரு பரீட்சைக்குமுன்னாலும்
உடலின் வானிலை அறிக்கை
மாறிவிடுகிறது...

பெருத்த மழை
பூகம்பம்...
மந்திரியின் மரணம்-என
ஏதாவது நடந்து
பரீட்சை தள்ளிப்போக வேணும் என்று
சுயநலமாய் சிந்திக்கும் பாழாய்ப்போன மனசு....

கடைசியில்..
எழுதிய பேப்பர்
தொலைந்து போகும்படியும்....
வைத்த நேர்த்திக்கடன்கள்
தோற்றுப்போகும்.....

பார்ப்பம் ;
அடுத்த பரீட்சைகேனும்
இதைவிட சிறப்பாய்
படித்தே தீருவேன்..! - என
ஒவ்வொரு பரீட்சைக்குப் பின்னாலும்
திட்டமிடுவதே வாடிக்கையாயிற்று ....