21 June 2010
ஊஞ்சல்...
மாமரத்திலலையும்
எனது ஊஞ்சலுக்கு
என்னவாகிற்று - என்றறிய
பதறுகிறது - மனசு !!!
நம்
பதுங்கிடங்களில் ;
பிணங்களிருப்பதாய் சொல்கிறார்கள்
என் ஸ்நேகிதிகளில்
யாரேனும்
மிச்சமிருக்கிறார்களா???
பெண்னைப்பெற்ற
அம்மாக்கலெல்லாம்
அழுதார்கள் !!!
அழகாய்ப்பெற்றதால் - நீ
அதிகமதிகமாய் - அழுதாய்
ஆயுதமுனைகளில்
கற்பு களவாடப்பட்ட;
கர்மம்பிடித்த
வாழ்க்கை - அது !!!
தமிழர் என்கிற
ஒற்றைக் காரணத்தில்
காலம் நம்மை
அடித்துத்துவைத்து ...!
மனசெல்லாம் - காயம் !!!
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகிறதாமே ?
எனது திருமணம் ...
யுத்தத்தில் - நிச்சயிக்கப்பட்டது
என்னைக்காப்பதற்கென
நீ - அறிந்த
மாற்றுவழி
வெளிநாட்டுமாப்பிள்ளைக்கு
மணமுடித்து வைப்பதுதான் !!!
அம்மா ...
காலத்தின் கலவரத்தால்
வெளிநாடுநோக்கி
என்னை துரத்தியடித்தாய் ...
ஊஞ்சலை ...
ஊரை ....
உன்னை
........................................
தொலைத்துவிட்டு ;
அவஸ்தைப்படுகிறது மனசு
ஒரு - அநாதைத்தேசத்தில் !!!
வாழ்வின் முகவரிமாறி
நெடுநாளாயிற்று
ஒரு ஆயுட்கைதியைப்போல்
அந்நிய தேசத்தில்
வாசிக்கப்படுகிறதென் வாழ்க்கை !!
தூசு படியாத்தெருக்கலும்...
' ஏசி ' அறைகளும் ....
பனிவடியும்
பகல்கலுமாய்....
ரசிப்பதற்கு ;
ஏராளமிருக்கின்றன ....!!!
மனசு என்னமோ ...
மாமரத்து ஊஞ்சலில்
பிடிவாதமாய் அலைகிறது ...!!!
எனதூர்
புழுதித் தெருக்களுக்கும்
வீராப்பாய்நிற்கும்
பனை மரங்களும்
தனி அழகு !!!
பீசாவும்
சிக்கனும் மட்டனும் ...
ருசிருசியாய் சமையல் ...;
அம்மா
உன் - சுடுசோறு;
சூடைமீன் பொறியல்;
முருங்கையிலை பால்கறியும்;
கைப்பக்குவத்தில்
எல்லா ஹோட்டல்களும்
தோற்றுப்போகும் ...!!!
தெருவில்
எச்சில்துப்பினாலும்
தண்டிக்கிறார்கள் - இங்கே
ஊர்த்தெருவேகிலுமாய்
இரத்தமும், சதையும்
சிதறிக்கிடந்தாலும்...
கண்டுகொள்வதில்லை
நமதூரில் !!!
பிரச்சினை
ஓய்ந்ததாய்ச்சொல்கிறார்கள் ...
நான் வருவேன்
மிகமிக சமிபத்தில்
என் குழந்தைகளை
கையோட ழைத்தபடி
நம் கலாச்சாரம் மாறாமல்
நான் வருவேன் !!!
என் ஸ்நேகிதிகளின்
இரத்தமும் சதையும்
சிதறிக்கிடக்கும்
தெருக்களின் - மீது
என்னை அழைத்துச்செல்ல
நீ - வருவாய் ...
அலையும் ஆத்மாவாய்!!!
அம்மாவினதும் ;
என் ஸ்நேகிதிகளினதும்
ஆத்மாக்களோடு ;
நானும் குழந்தைகளும்
கணவருமாய்
என் மாமரத்து ஊஞ்சலில்
ஆடிக்கொண்டேயிருப்போம்!!!
றஹீமா பைஷால்
20 June 2010
டயரி....!
திட்டித்தீர்த்தபோதும்..
இவை
பேனா மையினைத்தான்
தீர்த்தமாய் அருந்தும்!!
சொல்ல முடியாத
ரகசியங்கள்
ரகசியங்களாகவே
இதில் இருந்துவிடுகின்றன
வசனங்களாய்
கொட்டு.................
சுமக்க முடியாமல் போன
வாழ்வின் துயரங்களை எல்லாம்!!!!
நேரங் கிடைக்கும்
பொழுதுகளிலெல்லாம்
நிறைய நிறைய பேசு
மனிதர்களைபோல
ரகசியங்களை சொல்லும்
அசிங்கங்களை
டைரிகள் செய்யவதும் இல்லை
உயிரில் உறையாத
உணர்வுகளை
உலரப்போடு.....!!!
மறக்கமுடியாத
சமாச்சாரங்களை;
மனசின் சந்தோசங்களை
சேமித்து வை;
வாழ்வின் கடைசிப்பக்கங்களுக்காய்....!!!
எதுவும் எழுதப்படாமல்
பெயரை மட்டுமே
சுமந்தபடி
சும்மாவே இருக்கும்
நிறைய்யப்பேரின்
டயரிகள்..!!!
டயரிகள்
சொல்லும் சேதிகள்
சுவாரசியம்தான்........
கவனம் ....!!!!!!!!!!!
அடுத்தவன் டயரி புரட்டி
அசிங்கப்படாதிருக்கட்டும்
நம்
விழிகள்!!!!!!!!!!!!!!
04 June 2010
கடற்கரை.....
........
கால்கள்தான்
நடந்தன.................
மனசு குளிர்ந்தது!!!
கடற்கரையில்;
சிப்பிகள் சேகரிக்கும்
ஒரு குழந்தைத்தனமான
வயசிலும்.........
முதுமையிலுமாய்
வயசுகளுக்கு அப்பாற்பட்ட
அழகு
கடலில் மட்டுமே
இருக்கமுடியும்!!!
ஒரு அமைதியான
வாசிகசாலையின் ....
ஒரு மூலையில்
தனித்திருப்பதைப்போல
இந்தமணலில்.........
அமர்ந்திருத்தல்
கொள்ளைஅழகு!!!!
நட்சத்திரம் தெளித்து....
நிலா நிறைந்த
இரவுகளில்
பேசிக்கொள்ள
எவ்வளவோ இருக்கின்றன
குட்டிக் குட்டிக் கவிதைகள்
சொல்லிவிட்டு
திரும்பி ஓடும்
அலைகள்.....
கச்சான் விற்கும்
சிறுவன்!!
கால் புதையும்
மணல்!!!
என-ரசிப்பதற்கு
ஏராளமுண்டு..
ஆனாலும்
................
..................
மனிதர்களைப்போலவே;
வாசிக்க
விரும்பாத
இன்னுமொரு பக்கம்
கடலுக்கும் உண்டு
'சுனாமி' என்னும்
பயங்கரப்பெயரோடு
Subscribe to:
Posts (Atom)