24 March 2011
வெளிநாட்டுச் செய்திகள்....!!!
வறுமையும்
இந்த கிடுகு குடிசையும் தான்
மத்திய கிழக்கு மண்ணை
நோக்கி
என்னை
தூர நகர்த்திட்று....
தோளில் பயணப்பொதிகளின்
சுமைகளோடும்....
மனசு பூராவும்
எம்மாத்திரம்
ரணங்களோடும்
போய்வருவதாய் சொல்லி
விடைபெறுகிறேன்.....
அப்போதைக்கு
யாரும் என்னை
தடுத்து நிறுத்தவேயில்லை!!!
குழந்தைகள்
குதூகலிப்பிழந்து....
கண்களைகசக்க
வீட்டு மூலையில் இருந்து
உம்மாவின்
முணகல் சத்தம்!!!
"அவர் "
தலைகவிழ்ந்தபடி
பேசாமல் நிற்க
நான் விடைபெற்றேன்!!!
மத்திய கிழக்கு மண்ணை நோக்கி
என் விலாசம் நகர்த்தி....
பணிப்பெண்ணாய்
இப்போதைக்கு நான்
சொல்லமுடியாத
துயரங்களுக்கு நடுவிலும்
புழுவாய் நெளிந்து.....
ஊறிப்பொழிந்த
வியர்வைகளை
பத்திரப்படுத்தி பணமாக்கி
என் விலாசம் நோக்கி
நகர்த்தி
சில வருடங்களின்
தொலைவில்
"அவருக்குப்பிடிக்கும்"
குழந்தைகளுக்குப்பிடிக்கும்
என
வாங்கிக்குவித்ததை எல்லாம்
தோள்களில் சுமந்தபடி..
மறுபடியும்
என்
பிறந்த மண்ணில்
வந்து வீழ்கிறேன்!!!!
எம்மாத்திரம் சந்தோசம்
எம்மாத்திரம் கனவு....
ஊரே மாறிப்போயிருந்தது;
கிடுகு வேலிகள் தொலைந்து
மதில்களில் ஒரு
கம்பீரம் தெரிந்தது.....
அரைகுறையாய் கிடந்த
வீடுகள் எல்லாம்
நாகரீகத்துக்குள்
பக்குவப்பட்டிருந்தன.....!!!
விரைவைக்கூட்டி நடக்கிறேன்
வீடு வந்தது....
முற்றத்திலேயே
முறிந்து விழுந்தது
என் - முகம் !!!!!!!!!!!!!
போகும் போதிருந்ததை விடவும்
பொத்தல் விழுந்து
இத்து இறந்து போய்
என் - குடில் !!!
வயசுக்கு வந்த மகளோடு....
வயதான
என் - உம்மா
விஷயம் அறியாமல்
தேடிப்போனபோது
"அவர் "
நின்றிருந்தார் !!!
போகும்போது நின்றிருந்தாரே
தலைகவிழ்ந்தபடி ......
அப்படியேதான்
இப்போதும் நின்றிருந்தார்
அடுத்த தெருவில் இருக்கும்
இன்னொருத்தியின்
முற்றத்தில்...!!!!
Subscribe to:
Posts (Atom)